கவிக்குடில்

June 22, 2007

துபாய் கவிதைத் திருவிழா

Filed under: Uncategorized — kavikkudil @ 8:34 am

துபாய் கவிதைத் திருவிழா 

அமீரகத்தில் பெருக்கெடுத்து ஓடும் இலக்கிய ஆறு இலக்கிய சிந்தனையாளர்களையும் வாசகர்களையும் கட்டிபோட்டுவிட்டதை தொடர்ந்து துபாயில் பணிபுரியும் கடைநிலை தொழிலாளர்களையும் ரசி;க்க வைத்திருப்பதைக் கண்கூடாக பார்த்தது மட்டுமல்லாமல் இதயப்பூர்வமாக உள் வாங்கவும் முடிந்தது…   

ம் அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கூட்டிய கவிதைத் திருவிழா முழுமையான இலக்கியத் திருவிழாவாக புலம் பெயர்ந்து இலக்கியம் பேசும் கவிதை பேசும் மக்களிடையே நிறைவை தந்திருக்கிறது. சுமார் மூன்று மணிநேர இலக்கிய விழாவில் கலந்துகொண்ட அனைவரும் தமிழ்ச் சுவையில் கட்டுப்பட்டு அரங்கத்தில் பேச்சாளர்களின் பேச்சுகளில் ஒன்றர கலந்துவிட்டிருந்தனர்.   

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை 15-06-2007 அன்று துபாய் இந்திய தூதரக அரங்கத்தில் கவிதைத் திருவிழாவினை கவிதை மத்தாப்பு கொளுத்தி துவங்கிய விதமே சிறப்பெனலாம். விழாவிற்கு அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் தமிழ்த்திரு. எம்.ஏ.அப்துல் கதீம் தலைமையேற்று தலைமை உரை நிகழ்த்த விழா ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு பாரத் அனைவரையும் வரவேற்று பேசினார்.  

கவிஞர் திரு. மு.மேத்தா அவர்கள் தனது ஆகாயத்துக்கு அடுத்த வீடு கவிதை நூலுக்காக சாகித்ய அகடாமி விருதுபெற்றதை பாராட்டும் விதமாக அவரை அன்போடு அழைத்த கவிப்பேரன்களின் அன்பழைப்பையேற்று புதுக்கவிதைத்தாத்தா மு.மேத்தா அவர்களும். சிறப்பு விருந்தினர்களாக சென்னை அம்பத்தூர் சோக இகதா மகளிர் கல்லூரி நிர்வாகி திரு. சேது குமணன் மராட்டிய மாநில எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. சு. குமணராசன் சென்னை புதுக்கல்லூரி தமிழ் ஆய்வுத்துறை தலைவர் திரு. கம்பம். சாகுல் ஹமீது துபாய் இ.டி.எ.குழுமத்தின் இயக்குனர் திரு. செய்யது சலாஹ_த்தீன் உள்ளிட்ட சானறோர்களும் அமீரகத்தில் உள்ள தமிம் இயக்கங்களின் பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.  

திருவிழாவில் கவியரங்கை திரு.கே.ஹபீப் தொகுத்தளிக்க. கவியரங்கில் திரு. சம்சுத்தீன் திரு. காளிதாஸ் திருமதி. ஜஸீலா ரியாஜ் திரு. கவிமதி திரு. பூபாலகன் உள்ளிட்ட கவிஞர்கள் கவிதைச் சொன்னார்கள்.   திருமதி. ஜஸீலா ரியாஜ் சொன்ன கவிதை தன்னை ஈர்த்துவிட்டதாகவும் அவருக்கு தன் கல்லூரியின் சார்பில் கவிஞர். மு. மேத்தா விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் தருவதாக திரு. சேது குமணன் அவர்கள் உறுதியளித்து பேசினார். தனக்கு கிடைக்கப்போகும் பரிசு தொகையினை அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவைக்கே வழங்கப் போவதாக திருமதி ஜஸீலா உறுதியளித்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியதோடு அல்லாமல் கவிஞர் பேரவைக்கும் பெருமையும் சேர்த்தார்.  

பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சே.ரெ.பட்டணம் அ. மணி கவிஞர் மேத்தா பற்றியும். திரு. ஆசிப் மீரான் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிச்சித்தர் மு. மேத்தாவின் ஆகாயத்துக்கு அடுத்த வீடு நூலை பற்றியும் பேசினர்.  

மேலும் விழாவில் மும்பையில் வசிக்கும் கவிஞர் வெற்றிவேந்தனின் விடுதலை வேட்கை நூலைப் பற்றி பேரவை செயலாளர் இ.இசாக் அறிமுகம் செய்தபின் மு. மேத்தா நூலை வெளியிட  திரு சேது குமணன் அவர்களும் சலாகுத்தீன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.  

கவிதைத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக கவிஞர். மு. மேத்தா அவர்களுக்கு கவிச்சித்தர் என்ற அடைமொழியையும் திரு. சேது குமணன் திரு. சு. குமணராசன் ஆகியோருக்கு தமிழ் நேயர் என்ற அடைமொழியையும் கவிஞர் பேரவை செயலாளர் திரு இ. இசாக் அறிவிப்பு செய்ய பேரவை தலைவர் அப்துல் கதீம் கேடயம் வழங்க சிறப்பு விருந்தினர்களை அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை சிறப்புச் செய்தது.   

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் உரையாற்ற இறுதியாக கவிச்சித்தர் மு.மேத்தா அவர்கள் ஏற்புரையில் தனக்கு இவ்விழா மிகவும் மகிழ்வுடையதாகவும் இன்னும் உற்சாகத்தை தருவதாகவும் கூறி மகிழ்ந்தார்.

கவிதைத் திருவிழாவினை முழுவதும் திரு. கவிமதி தொகுத்து வழங்க திரு. ந. தமிழன்பு நன்றியுரையாற்ற திருவிழா  நிறைவடைந்தது.

May 11, 2007

கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா

Filed under: அழைப்பு — kavikkudil @ 11:11 am

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை
பெருமையுடன் நடத்தும்
கவிதைத் திருவிழா

நாள்; : 15.06.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி
இடம் : இந்திய தூதரக விழா அரங்கு

விழாவை சிறப்பிப்போர்

சாகித்ய அகாதெமி
விருது பெற்ற
புதுக்கவிதையின் தாத்தா
மு.மேத்தா

முனைவர்- கவிஞர்
சேது குமணன்

மும்பை எழுத்தாளர்
சு.குமணராசன்
மற்றும்
தமிழ் உறவுகள்

அனைத்து தமிழ் உறவுகளையும்
அன்புடன் அழைக்கிறோம்

April 20, 2007

என் பெயர் – மருதாயி – இன்குலாப்

Filed under: கவிதை — kavikkudil @ 9:42 am

என் பெயர் – மருதாயி – இன்குலாப் –

ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
தொல்காப்பியம்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
கம்ப இராமாயணம்
பொ¢யபுராணம்
மறந்து விட்டேன் –
திருக்குறள்

எல்லாவற்றிலும் சுட்டப்பட்டவள் நான்
தாய்மொழி – தமிழ்
பெயர் – மருதாயி
தொழில் – பரத்தை

என்னைக் கடைமகள் எனலாம்..
மதுரையைக் கொளுத்திய
கற்பரசியே –
தலையாய கற்பினள் அல்லள்!

உங்கள்
மூத்த தமிழ் அளவுகோலில்..
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் !

அய்யா
ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
என்னிடம் முதலில் வந்தவன்
உங்கள் கொள்ளுப் பாட்டன்..
இப்பொழுது
வந்து போனவன்
கொள்ளுப் பேரன்!

என்றாலும்
பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம்
“பெய்யெனப் பெய்ய”
தன் சடலம் எ¡¢யும் போது
உடன்வேக..
பாட்டி ஒருபோதும்
பாட்டனிடம் கேட்கவில்லை
“பெய்யெனச் சொல்லுக
உடன் வேக”

இருக்கையில் சில சமயங்களிலும்
போகையில் சில சமயங்களிலும்
பாட்டி
தன் தங்கையைத் தாரமாக்குவாள்

இல்லாவிடினும் இவன் மேய்வான்..
பத்தினியைப் பறிகொடுத்த
பாட்டனுக்கு
மச்சினியைக் கைப்பிடித்த
ஆறுதல்..

இல்லத்தரசி இருக்க என்னிடம் வந்தவனுக்கும்
மனைவி இருக்க மச்சினியைப் பிடித்தவனுக்கும்
ஒரு கீறலும் இல்லை கற்பில்..

தமிழ்க் குடும்பம் புனிதமானது!
தமிழ்ச் சமூகம் காலகாலமாய்க்
கற்புடையது.!

விரும்பியவனைச் சேர்வது
கற்பாகாது.
கட்டியவனை ஒப்புவதுதான்
கற்பாகும்..

கட்டியவன் முகமன்றி
வேறு முகம் கூடாது
காண.
கட்டியவன் நிழலன்றி
வேறு நிழலில்லை
பட.

அய்யா! அன்றதமிழ்ச் சான்றோரே!
கற்பரசி நினையாவிடினும்
கண்டவன் அவளை நினைத்தால்
அவள் கற்புக்கரசி ஆகமாட்டாள்..
கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்..

தமிழ்நாட்டுக் குரங்கும் மீனும்
கற்புடையவைதாம்.

கைம்மை உய்யாக் காமர் மந்தி
ஓங்குமலை அடுக்கத்துப்
பாய்ந்து
உயிர் செகுக்கும்.

தன்கணவன்மீன் அல்லாத
வேறு ஆண்மீனைத் தொடநேர்ந்த
மனைவிமீனை
வெட்கம் பிடுங்கித் தின்னும்..
தற்கொலை செய்ததோ
என்னவோ
தண்ணீ¡¢ல்..

உடன் கட்டை ஏறிய
பத்தினிப் பெண்ணைப்
பாராட்டாத
தமிழ் எழுத்தில்லை.
பொ¢யார் எழுத்தைத் தவிர.

பாவாடையும் சேலையுந்தான்
தமிழ்ப் பண்பாடு..
சு¡¢தாரும் பேண்டும்
கவர்ச்சிக் கண்றாவி!
மொபட் ஓட்ட பேண்டுதான் வசதியா?
மொபட் ஓட்டாதே..
படைநடை பயிலாதே..
தமிழ்ப் பெண் அடக்கமானவள்..
ஆறடிக் கூந்தல் இன்னுமோர்
அடையாளம்.

கூந்தல்வார நேரமில்லையா?
மூக்கடைப்பு நோய்த் தொலலையா?

கூந்தலைக் குறைக்காதே
தமிழ் குறைந்து போய்விடும்!

ஒருவனுக்கு உண்மையாய்
இருப்பதே தமிழ்க் கற்பு..
அவன் கல்லானாலும் மண்ணானாலும்
கட்டியவள் ஏற்கெனவே கன்னிதானா
என்று எதிர்பார்ப்பதே
தமிழ் மரபு நியாயம்..
தமிழர் அனைவரும் உறுதி கொள்ளலாம்.

இங்கிலாந்து நடத்திய
கன்னிமைச் சோதனையை
இல்லறம் தொடங்குவோன்..
நடத்திப் பார்க்கலாம்
தேறினால் மட்டுந்தான்
பண்பாடு தேறும்..
தமிழ்க் குடும்பம் புனிதமானது..

அய்யா ஆன்றதமிழ்ச் சான்றோரே!
உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த
காலகாலமாய் நானும் நடக்கிறேன்
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் –
தாய்மொழி – தமிழ்
பெயர் – மருதாயி
தொழில் – பரத்தை !

நன்றி : சிந்தனையாளன் – பொங்கல் சிறப்பு மலர் 2006

தற்கால இலக்கியம்.."உண்மையைச் சொல்ல நான் அஞ்சியதில்லை!’- கவிஞர் இன்குலாப்

Filed under: நேர்காணல் — kavikkudil @ 9:25 am

தற்கால இலக்கியம்..”உண்மையைச் சொல்ல நான் அஞ்சியதில்லை!’

– கவிஞர் இன்குலாப்

இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சிகர சிந்தனையை வாழ்க்கையாகவே வரித்துக்கொண்ட இவர், பெயரையே இன்குலாப் எனப் புனைந்து கொண்டார். இயற்பெயர் சாகுல் அமீது. ராமநாதபுரம், கீழக்கரையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த குடும்பத்தி லிருந்தே பாட்டுக்கட்டும் திறனையும், எதிர்ப்புக் குரலையும் ஈர்த்துக் கொண்ட இவரின் முதல் கவிதை முயற்சி 12 வயதில் நிகழ்ந்தது.
தர்க்காவில் ‘பேய் ஓட்டுகிறேன்’ என்று பெண்களைக் குச்சியால் அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு பொறுக்க முடியாத கணத்தில் முதல் கவிதை கனன்று வெளிப்பட்டது. அது முதல் இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.
சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் என சகல தளங்களிலும் நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இவரது குரல் உரத்து ஒலிக்கிறது.
இவரது கவிதைகள் ‘ஒவ்வொரு புல்லாய்’ எனும் தொகுதியாகவும், கட்டுரைகள் ‘ஆனால்’ எனும் நூலாகவும், நாடகங்கள் ‘குறிஞ்சிப்பாட்டு’, ‘குரல்கள்’ எனும் தொகுதி களாகவும், கதைகளும் குறுநாவலும் ‘பாலையில் ஒரு சுனை’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன. ‘பொன்னிக்குருவி’ ‘புலி நகச் சுவடுகள்’ எனும் கவிதை நூல்களும், ‘மணிமேகலை’ நாடக நூலும் தயாராகி வருகின்றன.
இவரது எழுத்துகளுக்காகக் கிடைத்தது விருதுகளோ பரிசுகளோ அல்ல; அச்சுறுத்தல்களும், நள்ளிரவுக் கைதுகளும் தான். இவரும் தனது படைப்புகளுக்காக எதிர்பார்த்திருப்பது விருது களையோ, பரிசுகளையோ அல்ல; சமூக மாற்றத்தைத்தான்.

இதோ சமரசம் செய்துகொள்ளாத இவருடன் ஒரு சந்திப்பு.

ஒரு படைப்பாளியின் கடமை என்ன?

இலக்கியம் என்பது ஒரு கலை. அதனால், கலைத் தரத்தில் மேம்பட்டதாக இலக்கியம் இருக்கவேண்டும். பொறுப்புணர்வுடன் செய்கிற இலக்கியங்கள்தான் சமூகத்துக்கு அதனுடைய இலக்கியச் சுவை உணர்வை வளர்ப்பதிலும் மனித உணர்வுகளை மேம்படுத்து வதிலும் உதவும். ஒரு கலையின் மூலம் கலைஞன் சுய அனுபவங்களை மட்டுமல்ல, சமூக அனுபவங் களையும் சொல்லிச் செல்கிறான். அவ்விதம் சொல்வதே அவன் கடமை.

40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக் கிறீர்கள். பல்வேறு காட்சி மாற்றங்களைக் கண்டிருக் கிறீர்கள். இன்றைய இலக்கியத் தன்மையின் முகம் மாறியிருக்கிறது. இந்த மாற்றம் குறித்து….

வரவேற்கத்தக்க போக்காகத்தான் உணர்கிறேன். தீவிரமான படைப்பு முயற்சி இளைஞர்களால் முன்வைக்கப் படுகிறது. இது ஏற்கெனவே எழுதிக்கொண்டிருக்கிறவர்களையும் இன்னும் புதிய விஷயங்களைச் சொல்லத் தூண்டுகிறது. புதிய விஷயங்களை ஏற்குமாறு அறைகூவல் விடுக்கிறது. எனினும், சமூகப் பொறுப்புணர்வு இல்லாமல், தோன்றுவதை எழுதுகிற போக்கும் காணப்படுகிறது. இது கால ஓட்டத்தில் என்ன கதியைப் பெறும் என்பதை இப்போது என்னால் சொல்லமுடியாது.தலித்தியம், பெண்ணியம் சார்ந்த படைப்புகள் இப்போது ஏராளமாக வருகின்றன. இந்தப் படைப்பு கள் பெரும்பாலும் சுயஅனுபவம் சார்ந்தே உள்ளன. இதனால் பல புதிய திறப்புகள் தமிழ் இலக்கியத் துக்குக் கிடைத்துள்ளன.

எனினும், ஒரு நேர்த்தியான படைப்பு என்கிற வகையில் எந்த அளவில் இவை நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளன?

சுய அனுபவம் சார்ந்து வரக்கூடிய ஒரு படைப்பு என்பது ஒரு சமூக வாழ்வனுபவத்தைத் திறந்துவிடக் கூடிய திறவுகோல்தான். ஆனால், சுயஅனுபவம் என்கிற சித்திரிப்பு உண்மையாக இருத்தல் வேண்டும். தலித்தியம், பெண்ணியம் சார்ந்த படைப்புகள் ஒரு நீண்ட பிரசவவலிக்குப் பிறகு முகம் காட்டி இருக்கின்றன. அதற்கான ஒத்திகைகளும் நடந்து கொண்டிருந்தன என்றுதான் சொல்லவேண்டும். தலித்திய, பெண்ணியப் படைப்பாளிகள் ஒரு குறித்த நோக்கோடு எழுதுகிறார்கள் என்றுதான் கருதுகிறேன். வெறும் ரசனைக்காக அவர்கள் செய்யவில்லை. அவை விடுதலைக்கான முன்மொழிவுகள். இந்தப் படைப்புகள் அனைத்தையும் நான் படித்தேன் என்று சொல்ல முடியாது. படித்த மட்டும் நான் நம்பிக்கை கொள்கிறேன். இன்று சமூக மாற்றத்துக்கான காத்திரமான படைப்புகளை தலித்திய, பெண்ணிய எழுத்தாளர்கள் தான் முதன்மையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதே பெண்ணிய, தலித்திய எழுத்தாளர் பலர் ‘தூய’ இலக்கியவாதிகளின் அநுக்கிரகத்தைப் பெறுவதுதான் ஒரு பேறு என்று கருதும் போக்கும் சிலரிடம் காணப்படுகிறது. புரட்சிகர மாற்றத்தை விரும்பாத ‘தூய’ இலக்கியவாதிகள் இத்தகைய படைப்புகளை ஆபத்தற்றதாகக் கருதுகிறார்கள். எனவே, இந்த வட்டத்தின் வரவேற்புகளுக்கு அப்பால், வெகுமக்களை நோக்கி விளிக்கக்கூடியதாக அவர் களுடைய படைப்புகள் செல்லவேண்டும். ஒரு படைப்பாளி ஓர் உண்மையின் தீவிரத்தால் படைப்பை உருவாக்க முயலும்போது மதவாதக் கோடுகளை பொருட்படுத்தவில்லை அல்லது அதனை எதிர்க்கும் கட்டாயத்துக்கு உள்ளாகிறார். இது இன்று வரக் கூடிய பெண்ணியப் படைப்பாளிகளுக்கு நேர்ந்தது என்று கூறுவதற்கு முன்னால் எனக்குக் கூடுதலாக நேர்ந்த அனுபவம். என் அனுபவத்தில் உண்மையைச் சொல்ல நான் அஞ்சியதில்லை. விளைவுகளைக் கண்டு பின்வாங்கியதில்லை.ஒடுக்கப்பட்ட சமூகம் விழிப்புணர்வு பெறுகிறபோது விடுதலை உணர்வோடும் எதிர்ப்புக் குரலோடும் கனன்று கொண்டிருக்கும். அவ்வுணர்வுகள் படைப்பாக்கப்படும் போது அதற்கேயுரிய இயல்புத் தன்மையோடு தவிர்க்க முடியாமல் வசவுச் சொற்களாகவும் வந்து விழும்.

அந்த உக்கிரத்தை உங்களின் ‘மனுசங்கடா’ பாடலில் இடம் பெற்றுள்ள வரியில் உணரமுடிந்தது. தமிழ்ச் சூழலில் அந்தப் பாடல் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அதே வேளை, வசவுச் சொற்களே தலித் இலக்கியம் என்பதான எண்ணம் இளம் தலித் படைப்பாளிகள் சிலரிடம் ஏற்பட்டிருக்கிறதே…?

‘மனுசங்கடா’ என்கிற என் பாடலில் நான் பயன் படுத்தியது போன்ற சொற்களைச் சொல்லவேண்டும் என்கிற நோக்கத்தில் எந்தப் படைப்பையும் செய்யக் கூடாது. படைப்பு முயற்சிக்கு ஒரு தர்க்கம் இருக்கிறது. அது வெளிப்பாட்டில் புலப்பட்டே தீரும். அத்தகைய ஒரு புலப்பாடு வசவுச் சொற்களைக் கொண்டு இயங்கு மாயின், அது தவறாகாது என்று நான் கருதுகிறேன்.

சில பெண்ணியக் கவிஞர்கள் பாலுறுப்புகள் சார்ந்த சொல்லாடல்களையும், பாலியல் அனுபவங்களையும் முன் வைக்கின்றனர். இத்தகைய படைப்புகள் புதிய அதிர்வுகளை உண்டாக்கி வருகின்றன. அந்தக் கவிதை களை எவ்விதம் அணுகுவது?

பாலுறுப்புகள் சார்ந்த சில சொல்லாடல்கள் தொல்தமிழ் இலக்கிய மரபுக்கு புதியதன்று. சில சொற்கள் மிக இயல்பாக பழம் இலக்கியங்களில் கையாளப்பட்டு வந்திருக்கின்றன. திருக்குறளுக்கு முன்பு இத்தகைய சொல்லாடல்கள் என்பது இயல்பாக வந்திருக்கிறது. திருக்குறள் ஒரு அறநூல். அது அறத்தை வலியுறுத்தும்போது இந்தச் சொற்களைத் தவிர்க்க முயல்கிறது. திருக்குறளுக்கு முந்தைய தொன்மை இலக்கியங்களில் கண், மூக்கு என்பன போன்ற உறுப்பு களின் சாதாரணத் தன்மைதான் இந்தப் பாலியல் உறுப்புகளுக்கும் தரப்பட்டிருக்கிறது. சில இடங்களில் அவற்றிற்கு ஒரு காமக்குறிப்பு தரப்பட்டிருக்கலாம். இன்று இந்த உறுப்புகளை ஆண் கவிஞர்கள் சுட்டும் போது, படிக்கும் ஆண் கவிமனம் பாராட்டுகிறது. ஆனால், இதே சொல்லை பெண் கவிஞர்கள் படைக்கும் போதுதான் அதிர்ச்சியுறுகிறது. இது திருக்குறள் காலம் தொடங்கி பெண்ணை சிறை காக்க முயன்ற கருத்தியல் தளத்தின் அதிகாரத்தைத்தான் நமக்கு உணர்த்துகிறது. அதிகாரம் உடைபடும் இத் தருணத்தில் தன் உறுப்பு பற்றிய பிரக்ஞையோடு பெண்கள் பேசத் தொடங்குகிறார்கள். படிக்கிறவர்கள் இந்த வார்த்தைகளில் உறைந்துபோய்விடாமல், வார்த்தைகளுக்கு அப்பால் அந்தப் படைப்பு உணர்த் தும் செய்தி என்ன என்பதை மனம் கொள்ள வேண்டும்.

சமீப காலமாக நாடகத் துறையில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள். அதற்கான தேவை, முயற்சிகள் பற்றி…?

ஒரு படைப்பாளி தனக்குச் சாத்தியமான அனைத்து தளங்களிலும் முயலவேண்டும். கவிதை, கதை, இவற்றை ஒரு தூயநிலைக்குக் கொண்டு செல்பவன் அல்லன் நான். போராட்டத்திற்காக எடுத்துச் செல்பவன். அந்த வகையில் நான் பிறந்த தமிழினத்தின் தொன்மை வரலாற்றை அதனுடைய பண்பாட்டுப் படிவங்களாக்கி இலக்கியத்தில் பார்க்கிறேன். அவை எனக்கு அந்த சமூகங்கள் போராடிய செய்தியை உணர்த்துகின்றன. இந்த அனுபவங்களை எழுத்தில் கோடு காட்டலாம். ஆனால், நாடகத்தில் காட்சிப்படுத்தி இயங்க வைக்கமுடியும். அதனால் நாடகத்தையும் கையிலெடுத்திருக்கிறேன்.

உங்கள் எழுத்துகள் எந்த அளவு சமூகத்தைப் பாதித் திருப்பதாக நினைக்கிறீர்கள்?

சமூகம் ஒரு மனிதநேயத்துடன் மாறுவதற்கான இயக்கத்தில் இருக்கிறது. அதில் எத்தனையோ கருவிகள் அந்த இயக்கத்துக்கு உதவி இருக்கலாம். அதில் ஒரு சிறு துரும்பாக என் எழுத்தும் இருக்கும் என்று நம்புகிறேன்.

April 17, 2007

கவிதைத் திருவிழா

Filed under: Uncategorized — kavikkudil @ 3:09 pm

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை
பெருமையுடன் நடத்தும்
கவிதைத் திருவிழா

நாள்; : 15.06.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி
இடம் : இந்திய தூதரக விழா அரங்கு

விழாவை சிறப்பிப்போர்

சாகித்ய அகாதெமி
விருது பெற்ற
புதுக்கவிதையின் தாத்தா
மு.மேத்தா

முனைவர்- கவிஞர்
சேது குமணன்

மற்றும்
தமிழ் உறவுகள்

அனைத்து தமிழ் உறவுகளையும்
அன்புடன் அழைக்கிறோம்

March 23, 2007

Hello world!

Filed under: Uncategorized — kavikkudil @ 2:13 pm

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

பால்வீதி – அப்துல் ரகுமான்

Filed under: கவிதை — kavikkudil @ 2:01 pm

தீக்குளியள்
————-
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியா

வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்ட

அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும

*******************

சத்திர வாசம்
————–
அர்த்தங்களின் சந்தையில் நாம்
முகவரிகளைத் தொலைத்துக் கொண்டோம

திறந்திருந்ததொரு
வார்த்தையுள் நுழைந்து
தாழிட்டுக் கொண்டேன்
விளக்கையும் அணைத்துவிட்ட

மற்றொரு வார்த்தையின் கதவை
நீ தட்டுகிறாய்
என்னைக் கூவ

கதவு

Filed under: கவிதை — kavikkudil @ 1:59 pm

கதவு
—–

பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்

ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன

கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்

கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன

சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன

பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்

கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது

கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது

கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது

நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன

நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்

மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது

நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது

இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா

கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்’ என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்

அந்தப்புரங்களில்….

Filed under: கவிதை — kavikkudil @ 1:55 pm

நினைவுகளில் சூலாகி
நினைவுகளில் புதைந்து
கணந்தோறும் – எனக்குப்
புதுப்புது அவதாரங்கள்

எண்ணங்களை சுவாசித்து
எண்ணங்களில் நான்றுகொண்டு
பொழுதுக்கும்
வாழ்வோடு கண்ணாமூச்சி

குப்பையைக் கிளராமல்
துயிலை அடைக்காகவே
அமரும் இமைகள்

நரம்புகளின் காம அழைப்பை
அலட்சியம் செய்து
நெருப்புக் காய்களால்
சதுரங்கமாடும் விரல்கள்

ஒட்டடைக் கோலிலேயே
வலைபின்னும் சிலந்தி நான்
சிக்குகின்ற ஈயும் நான்

– அப்துல் ரகுமான் (பால்வீதி)

கொடுக்கல்

Filed under: கவிதை — kavikkudil @ 1:53 pm

கொடுக்கல்
—————
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது

நீ ஒரு கருவியே

இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை

இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே

இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை

தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்

நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே

கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே

உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்

உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்

ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு

ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு

உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்

தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை

கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும

– அப்துல் ரகுமான் (சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து)

Next Page »

Blog at WordPress.com.