கவிக்குடில்

July 22, 2005

அறிதல்

Filed under: கவிதை — kavikkudil @ 10:31 am

சாதித் தமிழா
உன் வாரிசுகள் வெளிநாட்டானின்
கழிவுகளை தூய்மை செய்துக் கொண்டிருக்க
நீ
உடன்பிறந்தானின்
வாயில்
கழிவுகளை திணித்துக் கொண்டிருக்கிறாய்.

விருந்தினருக்கும்
உள்ளவற்றில் நல்லவற்றையளிப்பது
தமிழர்மரபு
முதலில் நீயொரு மனிதனா?
#

Advertisements

முரண்

Filed under: கவிதை — kavikkudil @ 10:27 am

1
சிக்கனம்
சேமிப்பு
எதிர்காலமென அறிவுரைகளை
அள்ளி வீசுகிறாள் என் துணைவி
புதிய புடவைக்கான கோரிக்கையோடு.

அலமாரியில் தூங்கும் பட்டுபுடவை
பயன்படுத்தபடாத கூடுதல் புடவைகள்
பற்றிய எந்த கருத்துகின்றி!
#

2
எங்கே போனாய்?
எப்போது வந்தாய்?
என்ன செய்தாய்?
அடுக்கடுக்கான
வினாக்களுக்கு விடை கேட்கிறேன்.

என்னை பற்றி
நீ
எதுவும் கேட்க கூடாதென்கிற
கட்டளையோடு!
#

July 8, 2005

கொண்டாட்டம்

Filed under: கவிதை — kavikkudil @ 12:24 pm

என் நண்பனின் வீடு
குழந்தையின்
பிறந்த நாள் கொண்டாட்டமென்பதாக தான்
அழைத்திருந்தார் அனைவரையும்
கூடியிருந்தவர்களும் அதற்காகத்தான்!

அலுவல்
அரசியல் அரட்டையென்று ஆண்களும்
ஆடை
அலங்காரம்
சமையல் செய்திகளென பெண்களும்
அணிப் பிரிந்து பொழுது கழித்தனர்
அவரவர் விருப்பபடி

எதைப் பற்றியும் கவலைப்படாமல்
எப்போதும் போல
மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருந்தாள்
குழந்தை
கரடி பொம்மைகளோடு!

July 1, 2005

கவிஞானாயிருத்தல் பற்றியதொரு கவிதை

Filed under: கவிதை — kavikkudil @ 7:10 am

நவீன யுக்திகளோடு
வாழ்வனுபவங்களின் பொருளுணர்த்தும் கவிதை
இவணுடையதென அடையாளப்பட
இச எழவுகள்
எதுவுமறியாவிட்டாலும் இளித்து நிற்கவேண்டும்,
அப்படியிருக்க அறியாதவன் நான்.

சொற்ப சொற்களுக்குள்
வாழ்வின் சூட்சுமம்
வைத்தெழுத தெரிந்தவனென அறிமுகமாக
எப்போதும் போதையிலிருக்கும்
நல்ல்ல்ல குடிகாரனாயிருக்க வேண்டும்,
இதுவும் எளிதானதல்லயெனக்கு.

அமரத்துவம் பெற்ற கவிதைகளை
அள்ளி அள்ளித் தருகிற ஞானகிறுக்கனென
பீடப் புகழுரைகள் பெற்றிட
மது அருந்துபவர்
ஒழுங்கீனர், தீண்டத்தகாதவர்
என்றொதுக்கி வைப்பவனாகவாவது இருக்கவேண்டும்,
குடி பழக்கமுடையவர் பலருண்டு
எனக்கு நெருக்கமானவர்களாக.

எந்த எல்லைக்குள்ளுமில்லாத என்னை
கவிஞனென்று சொல்லுகிற துணிவு எவனுக்குண்டு
என் நண்பர்களை தவிர

தேவையுணர்தல்

Filed under: கவிதை — kavikkudil @ 7:04 am

கட்டட கட்டுமான பணியின்போது
கோடையின்
கொடும் வெயில் தாங்கமுடியாமல்
சுருண்டு விழுந்து
செத்து போன
கூலி
தொழிலாளி
கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

கோடை வரும்முன்
தனி வானூர்தியேறி
தூரத்து
குளிர்தேசம் சென்று ஓய்வெடுக்க
துபாய் இளவரசனின்
பந்தயக்
குதிரையா
இவண்.

Blog at WordPress.com.